வேதமும் வேதவியாசரும்.
வேதங்களை எந்த மனிதருமே உருவாக்கவில்லை. பகவானே வேதத்தின் வடிவாக இருக்கிறான்; வேதங்களை ஈஸ்வரனும் உருவாக்கவில்லை.
பிரம்மாவே வேத மந்திரங்களைக் கொண்டு தான் படைப்புத் தொழிலைச் செய்கிறார்.பகவானையே வேத சொரூபமாக நாம் பார்க்கிறோம்.
வேத மந்திரங்களைக் கண்டறிந்துச் சொன்னவர்கள் ரிஷிகள். எனவே தான் அவர்களை “மந்திரங்களைக் கண்டவர்கள்” (மந்திர த்ரஷ்டா) என்கிறோம். பரப்பிரம்மத்தைப் போல ஸநாதனமாக (என்றென்றும் நிலைத்திருப்பவை) இருப்பவைகளே வேதங்கள்.
வேத சாகைகள்: -
முடிவில்லாத வேதங்களிலிருந்து எவ்வளவு தெரிந்து கொண்டால் ஒருஜீவன் ஸம்கரிக்கப்பட்டு (அதாவது பாபங்களாகிய அழுக்குகளை நீக்கி, சுத்தமாகி) பரம்பொருளோடு கலப்பதற்குப் போதுமோ, அதையே ஒரு சாகை என்பர்.
வேதத்தில் மொத்தம் 1180 சாகைகள் இருந்தன என விஷ்ணு புராண ஆதாரத்தில் கூறப்பட்டுள்ளது. கலியுகத்தில் மக்கள் வேத சாகைகள் அனைத்தையும் பாராயணம் செய்யவும், பின்பற்றவும் இயலாது! என உணர்ந்த கிருஷ்ணத்வைபாயனர் (வியாசர்) ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில் ஏதாவது ஒன்றிலே ஒரு சாகையை பாராயணம் செய்து, பின்பற்றினால் போதும்! என ஒரு புது வழிமுறையை ஏற்படுத்தினார்.
தனது சீடர்கள் நால்வரால் ஒவ்வொருவரிடமும் ஒரு வேதம் என்று பிரித்துக் கொடுத்து, அதன் சாகைகளை அவர்கள் பிரச்சாரம் செய்யும்படி செய்தார் வியாசர்.
ரிக் வேத சாகைகளை பைலர் என்ற சீடரிடமும், யஜுரை வைசம்பாயனர் என்ற சீடரிடமும், ஸாமத்தை ஜைமினி என்ற சீடரிடமும், அதர்வணத்தை ஸுமந்து என்பவரிடமும் கொடுத்துப் பிரச்சாரம் செய்ய வைத்தார்! வியாச பகவான்.
இப்படி ‘ஒரு ஜீவனுக்கு இது போதும்’ என்று வேதத்தை நான்காகவும், அந்த நான்கை 1180 சாகைகளாகவும் பிரித்துக் கொடுத்ததாலேயே கிருஷ்ணத்வைபாயனர் - வேதவியாசர் எனப் பெயர் பெற்றார்.
“வியாஸம்” என்பது “ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பலவாகப் பிரித்து, விவரித்து விளக்குவது”. அளவற்ற வேதங்களில் இருந்து தீர்மானமாக இவை போதும்! என்று பிரித்து விளக்கியதாலேயே கிருஷ்ண த்வைபாயனருக்கு வேதவியாசர் எனப் பெயர் ஏற்பட்டது.
அம்புப்படுக்கையில் இருந்தவாறே கிருஷ்ணரை ஆயிரம் பெயர்களால் துதித்தார் பீஷ்மர். அந்த விஷ்ணு சகஸ்ரநாமத்தில் மகாவிஷ்ணுவே வியாசராக வந்ததாகப் பீஷ்ம பிதாமகரால் புகழப்படுகிறார்.
ஓம் நமோ நாராயணா
கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.
No comments:
Post a Comment