Saturday, October 17, 2020

*ராம நாம மகிமை*

 *ராம நாம மகிமை*


இறைவனின் திருநாமங்களை வாய்விட்டு உரக்கச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வதன் பலன் அளவிட முடியாது என, தெய்வீக நூல்கள் சொல்கின்றன.

ராவண சம்ஹாரத்திற்கு பின், அகத்தியரின் ஆலோசனைப்படி, வைகாசி மாதம் பவுர்ணமி அன்று, அசுவமேத யாகம் செய்ய தீர்மானித்தார் ஸ்ரீராமர். அதற்காக, கறுத்த காது, வெளுத்த உடல், சிவந்த வாய், மஞ்சள் நிற வால் ஆகியவைகளுடன் கூடிய உயர் ரக குதிரை தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஸ்ரீராமரின் உத்தரவுப்படி அக்குதிரை, திக்விஜயத்திற்காக புறப்பட்டது.
சத்ருக்னன், அவரது பிள்ளை புஷ்கரன் மற்றும் ஆஞ்சநேயர் போன்றோர் பாதுகாவலர்களாக குதிரையை பின் தொடர்ந்தனர்.

அன்னை காமாட்சியை நேரில் தரிசித்த சுமதன் எனும் அரசரின் நாடு, சியவன முனிவரின் ஆசிரமம், புருஷோத்தம ஷேத்திரம், சக்கராங்க நகரம், தேஜப்புரம் எனும் பல பகுதிகளின் வழியாக நடைபெற்ற அவர்களின் பயணம், ஹோமகூடம் என்ற இடத்தை அடைந்ததும், அசையாமல் அப்படியே நின்றது குதிரை.
சேனை வீரர்கள் அதை பலவாறாக இழுத்துப் பார்த்தனர்; நகரவில்லை.

ஆஞ்சநேயர் தன் வாலால் சுற்றி, பலம் கொண்ட மட்டும் குதிரையை இழுத்தார். அப்போதும், குதிரை அசையவில்லை.

'இங்கே ஏதோ அதிசயம் இருக்க வேண்டும்; அதனால் தான் குதிரை நகர மறுக்கிறது...' என்று சுற்றிலும் தேடிப் பார்த்தனர். அவர்களின் பார்வையில், சவுனகர் முனிவரின் ஆசிரமம் தென்பட்டது. அனைவரும் அவரிடம் சென்று, நடந்ததை கூறினர்.

'குதிரையின் காதுகளில் விழும்படி, அனைவரும் ராம நாமத்தை உரக்கக் கூறுங்கள்...' என்றார் முனிவர். அதன்படி அனைவரும் குதிரை நின்ற இடத்தை சுற்றி வந்து, ராம நாமத்தை உரக்கச் கூறினர்.

அடுத்த நொடி, அவ்விடத்தில், ராட்சஷன் போல் தோற்றமளித்த ஒருவன் வெளிப்பட்டு, 'நான் கவுட தேசத்தை சேர்ந்த அந்தணன்; காவிரிக் கரையில் ஜெபம் செய்து, அதன் மூலம் கிடைத்த புண்ணியத்தின் பலனால் சொர்க்கம் சென்றேன்.
'வழியில் அப்சரஸ் பெண்கள் பணி விடைகள் செய்ய, ஏராளமான முனிவர்கள் தவம் செய்தபடி இருந்தனர். அவர்களை பார்த்த நான், சொர்க்கம் போகும் ஆணவத்தில், அவர்களை பழித்து பேசினேன். அதன் விளைவாகவே, இந்த ராட்சச ஜென்மம் வாய்த்தது.

'ராம நாமம் கேட்டால், சாப விமோசனம் பெறலாம் என்பதை அறிந்து, ஸ்ரீராமரின் அசுவமேத குதிரையை நிறுத்தினேன். நீங்கள் ராம நாமம் கூறியதும், விமோசனம் பெற்றேன்...' என்று சொல்லி, ராட்சஷன் வடிவம் நீங்கி, பழைய உருவம் அடைந்து சொர்க்கம் சென்றான்.

தெய்வ நாமம் எல்லாவிதமான பாவங்களையும் போக்கும்; தினமும் சில நிமிடங்களாவது இறை நாமத்தை சொல்வது, நமக்கும், நம் சந்ததிகளுக்கும் நன்மையை தரும்!

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

பல்லக்கு தூக்கிய எமன்!!!

 பல்லக்கு தூக்கிய எமன்!!!


வீதியில் ராம நாம சங்கீர்த்தனம் பாடியபடி பஜனை கோஷ்டி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர் இதை ஒரு போதும் விற்காதே ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப்பார் என்றார்.

அவனும் அப்படியே செய்தான்.
காலகிரமத்தில் இறந்து போனான்.
அவன் ஆத்மாவை இழுத்துப் போய் யமதர்மராஜன் முன் நிறுத்தினர்.

அவரும் அவனுடைய பாவ புண்ணிய கணக்கை பரிசீலித்து ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய் அதற்காக என்ன வேண்டுமோ கேள் என்றார்.

ராம நாமத்தை உபதேசித்த ஞானி அதை விற்காதே என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால் அதற்கு விலை கூற மறுத்து ராம நாமத்திற்கு நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ அதைத் தாருங்கள் என்றான்.

திகைத்த யமதர்ம ராஜா ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது என்று எண்ணி இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும் வா இந்திரனிடம் போகலாம் என்றார்.

நான் வருவதென்றால் பல்லக்கில் தான் வருவேன் அத்துடன் பல்லக்குத் தூக்குபவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா என்றான்.

இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால் ராம நாமம் மிகுந்த மகிமை உடையதாகத்தான் இருக்க வேண்டும். அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று எண்ணிய யமதர்ம ராஜா அதற்கு சம்மதித்து அவனை பல்லக்கில் உட்கார வைத்து சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.

இந்திரனோ ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது பிரம்மதேவரிடம் கேட்போம் வாருங்கள் என்றார்.

யமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன் என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான்.
அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு பிரம்மாவிடம் சென்றனர்.

அவரும் ராம நாம மகிமை சொல்ல என்னால் ஆகாது வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள் என்று சொல்ல அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.

அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது. அதற்காக இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை என்றனர்.

இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து நீங்கள் எல்லோரும் சுமந்து வருகிறீர்களே...

இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா? என்று சொல்லி
பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்!

🙏ஜெய் ஸ்ரீ ராம்🙏

Sunday, October 11, 2020

லக்னம் எதுவாயினும், தினம் எதுவாயினும்...

லக்னம் எதுவாயினும், தினம் எதுவாயினும், நக்ஷ்த்திர பலம் எதுவாயினும், சந்திர பல லக்னம் எதுவாயினும், வித்யா பலம், தெய்வ பலம் எந்த அளவாயினும் லக்ஷ்மிநாதனுடைய ( ஸ்ரீமந் நாராயணனது ) திருவடிகளை நினைத்தே துவங்குவதால் ஸர்வ மங்களம் உண்டாகட்டும்.

ஓம் அச்யுதாய நம: ( பர நிலை )
ஓம் அநந்தாய நம: ( வியூஹ நிலை )
ஓம் கோவிந்தா3ய நம: ( விபவ நிலை )
ஓம் கேசவாய நம: ( அந்தர் யாமித்வ நிலை )
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம: ( அர்ச்சா நிலை )

இதில் ஓம் அச்யுதாய நம: என்றதினால், பரமபத நாதனாகிய ஸ்ரீமந் நாராயணன் தன்னை அண்டியவர்களை அகலவிடாமல் ரக்ஷிப்பவன், அழிவற்றவன், அடியார்களை நழுவவிடாமல் மோக்ஷத்தை அளிப்பவன், ஸகல புவனங்களுக்கும் ஆதாரமாய் உள்ளவன் என்கிறபடி பரநிலை விவரிக்கப்படுகிறது.

அடுத்ததாக ஓம் அநந்தாய நம: என்றதினால் பரமபதத்தில் எழுந்தருளியுள்ள பரவாஸு தேவனாகிய ஸ்ரீமந் நாராயணன் தன்னிடமிருந்து மூன்று வியூஹ மூர்த்திகளை தோன்றுமாறு ஸங்கல்பித்தார். அதன்படி ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் ஆகிய மூன்று பேரும் அவரிடமிருந்து தோன்றினர். அந்த பரம புருஷனின் ( அநிருத்தனிடமிருந்து ) நான்காவது ஹம்சம் இவ்வுலகில் திருப்பாற்கடலில் அவதரித்தது. அந்த அவதாரமானது ஆதிசேஷன் மீது மோனநிலையில் பள்ளிகொண்டு ஜீவர்களின் ரக்ஷணத்தையே கருத்திற்கொண்டு விஸ்வக்ஷேனர், கருடர், நாரதர், தும்புரு போன்ற நித்யஸூரிகளால் துதிக்கப்பெற்றும் ஸ்ரீயாகிய லக்ஷ்மியுடன், ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதரராய் க்ஷீராப்தி நாதருக்கு அனந்தன் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள வியூஹ நிலையை குறிக்கிறது.

பிறகு, ஓம் கோவிந்தா3ய நம: என்றதினால் கோ என்ற பசுக்களுக்கு நாயகன் என்பதாகவும், கோ எனும் பூமியை (அவதாரங்களின் மூலம் ) பிரளய ஜலத்தில் அமிழ்ந்து விடாமல் ரக்ஷிப்பவராகவும், கோ எனும் (பன்னிரு ஆதித்யர்களாகிய) பசுக்களை (குடத்தின் சக்கரத்தின் நாபியில் ஆரங்கள் இணைக்கப்பட்டிருப்பது போல்) கட்டி நடத்துபவராகவும் உள்ள விபவ நிலையை குறிக்கிறது.

பின்பு ஓம் கேசவாய நம: என்றதினால் 'க' எனப்படும் பி3ரம்மனாகவும் 'அ' எனப்படும் விஷ்ணுவாகவும் 'ஈஸ' எனப்படும் ருத்3ரனாகவும் முறையே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரமாகிய முத்தொழிலை மேற்கொள்பவராய் இருத்தலால் கேசவன் என்றும் ஸப்3ரஹ்ம, ஸசிவ, ஸஹரி என்று நாராயண ஸூக்கத்தில் கூறியுள்ளபடி ஸகல ஜீவராசிகளின் ஹ்ருத3ய ஆகாயத்தில் அந்தர்யாமியாய் எழுந்தருளி அருள்பாலிப்பதாலும் அந்தர்யாமித்வ நிலை உணர்த்தப்படுகிறது.

ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம: என்றதினால் எவரெவர்கள் எந்தெந்த வடிவில் என்னை வணங்குகிறார்களோ அவரவர்களுக்கு அந்தந்த வடிவில் நானே நின்று அருள் பாலிக்கிறேன் என்று பகவத் கீதையிலும் "அவரவர் தமதமது அறிவறி வகை வகை ..." என்று ஆழ்வார்கள்பாடிய படியே அர்ச்சா நிலையம் உணர்த்தப்படுகிறது. (கிருஷ்ணாய - க்ருஷி எனப்படும் பயிர் போன்ற பூமியில் 'ண' எனப்படும் விதையாகிய ஆத்மாவை விதைத்து பலனை அறுவடை செய்பவர்).

உலகத்திலேயே நல்லவன் யார் தெரியுமா?..

 ● உலகத்திலேயே நல்லவன் யார் தெரியுமா?..


🙏🙏🙏கிருஷ்ண பரமாத்மா உணர்த்திய அற்புத நபர் இவர் தான்...

நல்லவர்களோடு இருக்கக்கூடிய நல்லவனை விட, கெட்டவர்களுடன் இருக்கக்கூடிய நல்லவன் தான் மிகவும் மேலானவன் என்பதை கிருஷ்ண பரமாத்மா உணர்த்தியுள்ளார்.

●உக்கிரமாக மகாபாரத போர்...

மகாபாரதப் போர் மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று போரின் 14ம் நாள். மிக கவலை தோய்ந்த முகத்துடன் கிருஷ்ண பரமாத்மா இன்று ஒரு மிகவும் நல்லவன் கொல்லப்படுவான் என்றார். உடனே அனைவரின் கண்களும் தர்மன் பக்கம் சென்றது. தர்மன் தான் இறக்கப்போகிறார் என நினைத்து அனைவரும் கவலையில் ஆழ்ந்தனர்.

ஆனால் அதைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் கிருஷ்ணர் போர்க்களம் நோக்கி தேரை செலுத்தினார். அவரை மற்ற போர் வீரர்கள் பின்தொடர்ந்தனர்.

● ​பீமனை எதிர்த்த விகர்ணன்...

கெளரவர்கள் 100 பேரை தான் கொல்வேன் என சபதம் ஏற்றிருந்தான் பீமன். அன்று பீமன் முன் வந்து நின்றவன் விகர்ணன். பாஞ்சாலியின் துகிலுரிக்கப்பட்ட போது, அந்த அரங்கத்தில் இது மாபெரும் தவறு என கண்டித்து அறங்காவலனாக நின்றான். ஆனால் அவன் சொல்வதை துரியோதனும், சகுனியும் கேட்கவில்லை

அதை நினைவு கூர்ந்த பீமன், என் எதிரில் நிற்காமல் அப்பால் போய்விடு என பணிக்கிறான். ஆனால் அதை விகர்ணன் மறுக்கிறான். உன் நல் உள்ளத்தை கண்டதால் என் கதை கூட உன்னை கொல்ல விரும்பாது அதனால் இங்கிருந்து சென்றுவிடு என எச்சரிக்கிறான். இல்லையென்றால் எங்கள் பக்கம் வந்து விடு என அழைக்கிறார். ஆனால் விகர்ணனோ இல்லை நான் என் அண்ணனுக்காகச் சண்டையிடுகிறேன் என்றான்.

● நல்லவனை கொன்ற பீமன்...

விகர்ணனுடன் வேண்டா வெறுப்பாக சண்டையிடுகிறான் பீமன். தான் ஒரு பெரும் வீரன் என்பதை பீமனுக்கு உணர்த்தினான். சமாளிக்க முடியாத பீமன் இல்லை இவனை தன் கதை முடித்தால் தான் முடியும் என்பதை உணர்ந்தான்.

அதனால் தன் கதாயுதத்தை ஓங்கி வீசினான். விகர்ணனும் உயிர்விட்டு வீழ்ந்தான்.

● யார் நல்லவன்?...

விகர்ணனை கொன்றதால் ஆர்ப்பரித்தனர் பாண்டவர்களின் படை. அங்கு வந்த கிருஷ்ண பரமாத்மா கூறினார், “நல்லவர்களோடு இருக்கும் நல்லவனை விட, கெட்டவர்களுடன் இருக்கும் நல்லவன் தான் மேலானவன். விகர்ணனும் அப்படிப்பட்டவன் தான்” என்றார்.

அதாவது கெட்ட எண்ணங்களுடன் இருக்கும் கௌரவர்களின் பக்கம் இருந்த விகர்ணன், அவர்களின் தவறான செயலை சுட்டிக் காட்டி நல்லவன் என்பதை உணர்த்தினான்.

● விகர்ணன் எனும் நல்லவன்...

அதே போல் தங்கள் பக்கம் வந்து விடு உனக்கு பதவி தருகிறேன் என அழைத்த போதும் கூட அதை ஏற்க மறுத்து சண்டையிட்டான். அதுவும் அவனின் சுய பகை கிடையாது, சுய கெளரவமும் கிடையாது. மாறாக எதையும் எதிர்பார்க்காமல், தன் அண்ணனுக்காக மட்டும் களத்தில் இறங்கிச் சண்டையிட்டு உயிர் துரந்துள்ளான்.

விகர்ணனை விட இந்த உலகில் யார் தான் நல்லவனாக இருந்துவிட முடியும் சொல்லுங்கள் என்றார்.

கிருஷ்ணரின் கூற்றை கேட்ட தர்மரும், பாண்டவர்களும் மனமொத்து ஏற்றுக்
கொண்டனர்.

● விகர்ணன் தந்த ​நீதி:

தான் நல்லவன், தான் செய்வதன் அர்த்தம் இது தான் என நல்லவன் என காட்டிக்கொள்ளப் பல நாடகங்களை நடத்தி வெளியில் மதிக்கப்படுகின்ற நல்லவர்களை விட, எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல், தன் மனதுக்கு எது சரி, தர்மம் என்று படுகிறதோ அதை தான் செய்வதோடு, தன் குடும்பத்தினர், நண்பர்கள் செய்ய விரும்புபவராக, கண்டித்து நல்வழி காட்டுபவராக இருக்கிறாரோ அவரே எல்லா இடத்திலும் நல்லவர்.

விளம்பரம் கொடுத்து நல்லவன் என காட்டிக் கொள்பவர்கள் பலர் இருக்க, விகர்ணனைப் போல பல நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

🙏நல்லவன் வாழ்வான்🙏

*"கோபத்தைக் குறைப்பவனே ஞானி "

 *ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்...*


*ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர் , அவரது சகோதரர் பலராமர் , அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர்*.

*நடு இரவாகி விட்டது*.

*மூவரும் ஒரிடத்தில் தங்கி விட்டு விடிந்ததும் பின்பு செல்லலாம் என்று எண்ணினர்*.

*வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் , மூவரும் ஒரு சேரத் தூங்கக் கூடாது என்றும் , ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்*.

*அதன்படி ஸ்ரீ கிருஷ்ணரும் , பலராமரும் தூங்கச் செல்ல , அர்ஜுனன் காவல் இருந்தான்*.

*அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது*.

*அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது*.

*அகன்ற நாசியும் , தூக்கிய பற்களும் , முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்*.

*மரத்தடியில் இருவர் தூங்குவதையும் , அதற்கு ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது*.

*அதைக் கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்*.

*அப்போது அவ்வுருவம் ,* *அவ்விருவரையும் தான் கொல்லப்*
*போவதாகவும் , அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது*.

*அதைக் கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்*.

*அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக , அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது*.

*அர்ஜுனன் , ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது*.

*அர்ஜுனனை பலமாகத் தாக்கி விட்டு மறைந்தது*.

*இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பி விட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்*.
*பலராமர் காவல் இருந்தார்*.

*அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி , அர்ஜுனனிடம் கூறியது போல பலராமரிடமும் கூறியது*.

*அதைக் கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்*.

*அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை*.

*பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது*.

*பின் பலராமரையும் பலமாகத் தாக்கி* *விட்டு , அவ்வுருவம்* *மறைந்து*
*விட்டது*.

*மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பி விட்டு படுக்கச் சென்றார்*.

*அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது*.

*அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய் ?! என்றது அவ்வுருவம்*.

*உனது தூக்கிய பற்களும் , அழகான முட்டைக் கண்களையும் கண்டு தான் , என்றார் சிரிப்பை அடக்க முடியாமல்*.
*அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது*.

*கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே , சண்டை போட்டார்*.

*கிருஷ்ணர் , சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்து கொண்டே வந்தது*.

*கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.*

*ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில்* *முடிந்து வைத்தார்*.

*பொழுது விடிந்தது*.

*பலராமரும் , அர்ஜுனனும் எழுந்தனர்*,.

*இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும் , அவர்களைத் தாக்கியதும் , அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பின்னர் பெரிதாகியது என்பது பற்றியும் பேசினர்*.

*அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி , நீங்கள் இருவரும் தீவிரமாக சண்டை போட்ட உருவம் இது தான்*.

*நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள்*.

*உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது*

*நான் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால் , இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து பின்பு ஒரு புழுவாக மாறி விட்டது*.

*வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு , புன்னகையோடு வெளியேறி விலகி இருந்து விட்டால் , அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்*.

*"கோபத்தைக் குறைப்பவனே ஞானி " என்றார்*.

*ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்*

*இப்படித் தான் நாம் பற்பல விஷயங்களுக்கு , நாம் ரியாக்ட் செய்யாமல் இருந்தாலே அந்த விஷயம் , பிரச்சனை ஆகாமல் பிசுபிசுத்துப் புழு போல ஒன்றும் இல்லாமல் போய் விடும்*

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...