Thursday, December 28, 2017

மார்கழி மாதத்தின் சிறப்பு !!


மார்கழி மாதத்தின் சிறப்பு !!
---
இந்து மதத்தை பொறுத்தவரை, மற்ற மாதங்களை விட மார்கழி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திர வல்லுனர்கள் மார்கழி மாதத்தை (சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால்) #தனூர் #மாதம் என்று கூறுகின்றனர்.
---
மார்கழி மாத நாட்கள் அனைத்தும் மிகவும் விசேஷமானவை. நாள்தோறும் சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் #திருவெம்பாவை, #திருப்பள்ளியெழுச்சியும், #விஷ்ணு ஆலயங்களில் #திருப்பாவையும் பாடப்படும்.

மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து, வீடுகளை சுத்தம் செய்து, உடல் நீராடி, வீட்டு வாசல்களில் அழகிய கோலங்கள் போடுவார்கள். கோலத்தில் மார்கழி பிள்ளையார் வைத்து புஷ்பங்கள் இட்டு, ஆலயம் சென்று இறைவனை வழிபடுவார்கள். இந்த மாதத்தில் மக்கள் அனைவரும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க பார்க்க முடியும்.

மனிதர்களுக்கு ஒரு நாள், 60 நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்). பகல் 30 நாழிகை, இரவு 30 நாழிகை. மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி இரவுக் காலம் முடிகிற #தேவர்களின் #வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் #தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும். ஒரு நாளின் முக்கியமான பாகம் வைகறைப் பொழுது என்றால் அது மிகையாகாது.

 இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மார்கழியில்தான் இறைவனை அதிகமாக வழிபடும் நிகழ்ச்சிகள் வருகின்றன. மார்கழி மாதத்தில் நிகழ்ந்த சில புராண நிகழ்வுகளை இங்கு காண்போம்
---
 மகாபார யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.

 திருப்பாற்கடல் கடையப்பட்டதும், முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில்தான்.

இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு.
---
எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான். இவ்வாறு பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம்.

 மார்கழி மாத அதிகாலைப் பொழுதில், மக்கள் அனைவரும் காத்திருந்து அம்மையப்பன் அருள்பெற்று சகல காரியங்களும் இடையூறின்றி இனிதே நிறைவேற பிரார்த்தனை செய்கின்றனர். இந்த நேரத்தில்தான் சிதம்பரம் நடராஜர் ஐந்தொழில்களையும் புரிகின்றார்.

சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமான விஷேசங்களுள் ஓன்று.

ஆன்மீக மலர்ச்சிக்கு சிறந்த மாதமாக கருதப்படும் இந்த மார்கழி மாதத்தில் இறைவனை மனதால் துதித்து போற்றுங்கள்..... எல்லா செல்வங்களையும் பெறுங்கள்....

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...