Saturday, July 14, 2018

ஓம் நமோ நாராயணாய

ஓம் நமோ நாராயணாயா மந்திரம் சொல்வதால் என்ன பலன்?

ஓம் நமோ நாராயணாயா அந்த மந்திரத்தைக் கேட்பவர்களுக்கே முக்தி என்றால், அதைச் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு பயன்கள் கிடைக்கும்.

எப்பொழுதும் கையில் தம்பூராவுடன், “ஓம் நமோ நாராயணாயா…” எனும் மந்திரத்தை உச்சரித்த படியே மூன்று உலகையும் வலம் வருபவர் சப்த ரிஷிகளில் ஒருவரான நாரதர். பக்திக்கு உதாரணமான நாரத முனிவர் ஏன் அந்த மந்திரத்தை எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தெரியுமா?

ஒரு நாள் வைகுண்டத்தில் இறைவன் நாராயணன் பாம்புப் படுக்கையில் படுத்திருந்தார். அவரின் காலுக்கருகில் மகாலட்சுமி அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த நாரதர், “இறைவனே, உன் பக்தர்கள் அனைவரும் உனது பெயரைச் சொல்கிறார்களே ? அப்படி என்ன இருக்கிறது உனது பெயரில்?” எனக் கேட்டார். நாராயணன் நாரதரை பார்த்து, “நாரதா, அவர்கள் என் பெயரைச் சொல்லி வேண்டுவதை நான் உனக்குச் சொல்லி விளக்குவதை விட, நீயே அதை நேரடியாகச் சென்று தெரிந்து கொள். நீ உடனடியாகப் பூலோகம் சென்று தென்திசையில் இருக்கும் வனத்தில் வாழும் ஒரு புழுவிடம் அந்த மந்திரத்தைச் சொல்.” என்றார்.

உடனே நாரதரும் நாராயணன் சொன்ன வனத்தை நோக்கிச் சென்றார். அங்கு ஒரு புழு இலையின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் அருகில் சென்ற நாரதர் அதனிடம், “ஓம் நமோ நாராயணாயா…” என்று சொன்னார். உடனே அந்தப் புழு செத்து விழுந்தது. நாரதர் குழப்பம் அடைந்து வைகுண்டம் சென்றார். “இறைவனே, நான் அந்தப் புழுவிடம், தங்கள் பெயரைச் சொல்லியதும் அந்தப் புழு செத்து விழுந்து விட்டது. இது தான் உங்கள் பெயரின் மகிமையா? ” எனக் கேட்டார் நாரதர்.

அதைக் கேட்ட நாராயணன், “நாரதா, நீ மீண்டும் பூலோகம் செல், அங்கு ஒரு பசு மாடு ஒரு கன்றை ஈனும். அதனிடம் சென்று என் பெயருடனான மந்திரத்தை சொல்” என்றார். நாரதர் மீண்டும் பூலோகம் வந்தார். அங்கு அவர் சொன்னபடி ஒரு பசு மாடு கன்றை ஈன்றது. நாரதர் அந்தக் கன்றின் அருகில் சென்று, “ஓம் நமோ நாராயணாயா…” என்றார்.

பிறந்து சில நிமிடங்களே வாழ்ந்த அந்தக் கன்று கீழே விழுந்து இறந்தது.

நாரதர் திடுக்கிட்டார். அவர் மனதில், “பசுமாட்டைக் கொல்வதே பெரும் பாவம். இதில் பிறந்து சில நிமிடங்களே ஆன, கன்றாக இருக்கும் பொழுதே அந்த மந்திரத்தை சொல்லி அதைக் கொன்றுவிட்டோமே…” என்று நினைத்து வருந்தினார்.

உடனே நாரதர் அங்கிருந்து மீண்டும் வைகுண்டத்துக்கு வந்து சேர்ந்தார்.

“இறைவனே, இது என்ன விளையாட்டு? நான் தங்களின் பேச்சைக் கேட்டு, உங்கள் பெயரிலான மந்திரத்தைச் சொன்னவுடன், அந்தக் கன்று இறந்து போய் விட்டது… மிகப் பெரிய பாவத்தைச் செய்து விட்டேனே…” என்றார். “நாரதா, நீ கவலைப்படாதே, மீண்டும் ஒரு முறை பூலோகம் சென்று, நான் சொல்லுமிடத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனிடம் என் பெயரிலான மந்திரத்தைச் சொல்லிப் பார்” என்றார் நாராயணன். நாரதருக்கோ மிகுந்த பயமாகி விட்டது. ஏற்கனவே இரு முறை இறைவன் பெயரிலான மந்திரத்தைச் சொல்லி புழுவும், பசுவின் கன்றும் இறந்து போய்விட்டன. இப்போது, தனனால் ஒரு சிறுவன் இறந்து போய் விடக்கூடாதே” எனக் கவலைப்பட்டார்.

இறைவன் அவரைப் பார்க்க, மனதைத் திடப்படுத்திக் கொண்டு பூலோகத்திற்கு வந்தார். அங்கு அவர் சொன்ன இடத்தில் சிறுவன் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அச்சத்துடன் அவனருகில் சென்ற நாரதர், “ஓம் நமோ நாராயணாயா…” என்று சொன்னார். அவ்வளவுதான் அந்தச் சிறுவனும் இறந்து போனான். நாரதருக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. இறைவன் தன்னை வைத்து மூன்று உயிர்களை இறக்கச் செய்து விட்டாரே…” என்று கவலையுடன் மீண்டும் வைகுண்டம் வந்தடைந்தார். அங்கு நாராயணனும் மகாலட்சுமியும் அமர்ந்திருக்க, அவர்களின் அருகில் கீழாக ஒரு முனிவரும் அமர்ந்து இருந்தார். மனம் தடுமாறிய நிலையில் வந்த நாரதரை கண்ட நாராயணன், “நாரதா, ஏன் இப்படி கவலையுடன் வருகிறாய். உனக்கு என்ன ஆயிற்று?” என கேட்டார்.

நாரதர், அங்கு புதிதாக வந்திருந்த முனிவரையும் குழப்பத்துடன் பார்த்தார்.

பின்பு அவர் நாராயணனிடம், “இறைவா, இது என்ன சோதனை? நான் தங்களிடம், தங்களின் பெயரிலான மந்திரத்தின் சிறப்பைச் சொல்லும்படி கேட்டேன். ஆனால், தாங்களோ பூலோகத்திற்குச் சென்று உங்கள் பெயரிலான மந்திரத்தைச் சொல்லிப் பார்க்கச் சொன்னீர்கள், நான் உங்களின் பெயரிலான மந்திரத்தைச் சொன்னவுடன் அந்தப் புழு இறந்து விட்டது. அடுத்து பசுவின் கன்று இறந்து விட்டது. அதன் பின்பு இளம் வயது பாலகன் இறந்து போனான். உங்கள் பெயரிலான மந்திரத்தைச் சொன்னவுடன் அந்த உயிர்கள் இறந்து போய் விடுகின்றன. உங்கள் பெயரிலான மந்திரம் இவ்வளவு கொடுமையாக இருக்கிறதே…? ஒரு வேளை அதை நான் உச்சரித்தது தவறாக இருந்திருக்குமோ…?” எனக் கேட்டார் நாரதர்.

உடனே நாராயணன் நாரதரைப் பார்த்துச் சிரித்தார்.

பின்னர், “நாரதா, நீ சொல்வதிலும் உண்மை இருக்கும் என நினைக்கிறேன். எங்கே என் முன்னாள் ஒரு முறை அந்த மந்திரத்தைச் சொல் பார்க்கலாம்” என்றார். இறைவன் இருக்கும் இடத்தில், தனது மனதை திடமாக்கிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு அந்த மந்திரத்தைச் சொன்னார்.

“ஓம் நமோ நாராயணாயா…”

நாரதர் கண்களை திறந்து பார்த்தார். இறைவனின் கீழாக அமர்ந்திருந்த முனிவர் உடலை விடுத்து, அந்த ஆன்மா இறைவன் காலடியைச் சென்றடைந்தது. நாரதர் கலங்கிப் போய் விட்டார். நாராயணன், நாரதரை பார்த்து, “நாரதா… எனது பெயரை உச்சரித்தால் அனைத்து உயிர்களும் முக்தி அடையும். உனது வாயால் என் பெயரிலான மந்திரத்தைக் கேட்டதும் அந்தப் புழு பசுவாகவும், பசு பாலகனகவும் மறுபிறப்பை அடைந்தது.

பாலகன் மாமுனியாக அவதரித்ததும், அந்தப் பெயரிலான மந்திரச் சிறப்பினால் தான். கடைசியாக நீ அந்த மந்திரத்தை இங்கு சொன்னதும், அந்த மாமுனியும் முக்தி அடைந்தார். என் பெயரிலான மந்திரம் அனைவரையும் முக்தியடைய வைக்கும் என்பதை உணர்த்தவே உன்னைப் பயன்படுத்திக் கொண்டேன். அந்த மந்திரத்தைக் கேட்பவர்களுக்கே முக்தி என்றால், அதைச் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு பயன்கள் கிடைக்கும் என்பதை எண்ணிப்பார்” என்றார்.

அன்று முதல் தொடர்ந்து, “ஓம் நமோ நாராயணாயா… ஓம் நமோ நாராயணாயா… ஓம் நமோ நாராயணாயா…” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இப்போது, நாரதருக்கு புரிந்தது, உங்களுக்குப் புரிந்திருக்கும்…!

ஓம் நமோ நாராயணாய

ஓம் நமோ நாராயணாய

Wednesday, July 11, 2018

திருப்பாவை முப்பது பாசுரங்கள் பாடினாள் ஆண்டாள்


திருப்பாவை முப்பது பாசுரங்கள் பாடினாள் ஆண்டாள்.

அவற்றில் முதல் பத்து, "அவன் திருநாமத்தைச் சொல்லு" என்று உணர்த்துகின்றன. இரண்டாவது பத்து, "உயர்ந்ததான அவன் திருவடியை அர்ச்சனை பண்ணிப்பாரு" என்கிற பாசுரங்கள். மூன்றாவது பத்தோ "அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணு" என்று சொல்கின்றன.

ஆக வராஹ மூர்த்தியினிடத்திலே அன்று கேட்ட மூன்று விஷயங்களை முப்பது பாசுரங்களாய்ப் பாடி, ஆண்டாள் அவதாரத்திலே எடுத்துக் காட்டினாள்.
திருப்பாவை என்பது ஒரு நூல் மட்டுமல்ல. அது ஒரு யாகம். ஆண்டாள் பண்ணிய வேள்வி அது. வராஹ மூர்த்தியினிடத்த்திலே பெற்ற உபதேசத்தைக் கொண்டு தனுர் (மார்கழி) மாசத்திலே ஒரு வேள்வி வளர்க்கிறாள்.

வேள்வி செய்வதற்கு கபாலம் என்றொரு பாத்திர சாதனம் உண்டு. அதிலே புரோடாசத்தை வைத்து நெய்யைத் தடவி சமர்ப்பிப்பார்கள். ஆண்டாள் பண்ணிய திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபால சாதனங்கள் என்றே சொல்லலாம். ஆசாரிய அனுக்கிரஹம் என்கிற நெய்யினால் தடவி அதைச் சமர்ப்பிக்கிறாள்.

வேள்வி பண்ணும்போது ஒவ்வொரு கபாலத்தைச் சமர்ப்பிக்கும் போதும் திரிவிக்கிரமாவதாரனான எம்பெருமானை ஸ்தோத்திரம் பண்ணிச் சமர்ப்பிப்பது மரபு.

திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபாலங்கள் என்றேன், இல்லையா? ஒவ்வொரு கபாலத்தின் தொடக்கத்திலும் திரிவிக்கிரமனைத் துதிக்கிறாள் ஆண்டாள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
"ஓங்கி உலகளந்த உத்தமன்" என்று முதல் பத்திலே திரிவிக்கிரமனை நினைக்கிறாள்.

"அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த" என்று அடுத்த பதினொன்று முதல் இருபது வரையிலான பாசுரத்துக்குள்ளே இரண்டாவது முறையாக திரிவிக்கிரம அவதாரத்தைப் பாடுகிறாள்.

"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி" என்று மறுபடியும், இருபத்தொன்று முதல் முப்பது வரையிலான பாசுரங்களுக்குள்ளே மறுபடியும் திரிவிக்கிரமன் திருவடிகளைப் போற்றுகிறாள்.

ஆகையினாலே, திருப்பாவை ஒரு வேள்வி போன்றது. ஆண்டாள் நமக்கு கீதையின் வழியைக் காட்டி, "நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா" என்று ஆச்ரயித்து, அவனையே திருக்கல்யாணமும் பண்ணிக் கொண்டாள்.

திருவல்லிக்கேணி



வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
விழுமிய முனிவரர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை
குவலயத்தோர் தொழுது ஏத்தும்

ஆதியை அமுதை என்னை ஆள் உடை
அப்பனை-ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே ... !!!

Tuesday, July 10, 2018

திருமழிசை ஆழ்வார்


திருமழிசை ஆழ்வார்

மகிசாரக்ஷேத்ரம் என்னும் பெயருடைய திருத்தலம் திருமழிசையாகும். இறைவளமும் இசைவளமும் ஒருங்கே நிரம்பப்பெற்ற திருத்தலம் திருமழிசையாகும்.  திருமழிசை கோவிலில் எப்போதும் வேதம் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். அந்தணர்கள் அக்கோவிலைச் சுற்றி குடியிருந்தனர். அத்திருத்தலத்தின் தபோவனத்தில் முனிவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் பார்கவ முனிவரும் அவரது மனைவி கனகாங்கியும் வாழ்ந்து வந்தார்கள்.  அவர்களுக்கு குழந்தை இல்லையே என்கிற கவலையும் இருந்தது.  இருவரும் இல்லத்தில் இருந்துக் கொண்டே வானப்ரஸ்தத்தை அடைவதற்கான வழிகளை கடைப்பிடித்தனர். அப்போது பார்கவ முனிவரும் மற்ற முனிவர்களோடு சேர்ந்து தீர்க்கசத்திர யாகம் நடத்தி வந்தார். அச்சமயம் அவர் மனைவி கருவுற்றிருந்தாள்.  ஆனால் அவரது மனைவிக்கோ பத்து மாதமாகியும் குழந்தையும் பிறக்கவில்லை வலியும் எடுக்கவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் தவித்து நின்ற அவர்களை எம்பெருமான் சோதிக்க நினைத்தார்.

சித்தார்த்தி ஆண்டு தை மாதம் கிருஷ்ணபட்சம் ப்ரதமை திதி ஞாயிற்றுக்கிழமை மகம் நக்ஷத்திரத்தில் திருமாலின் திருக்கரங்களிலே ஒளிவிடும் சுதர்சன சக்கரத்தின் அம்சமாக கனகாங்கி வயிற்றில் இருந்து அங்கங்களே இல்லாத ஒரு ஜீவன் பிறந்தது. பிள்ளைக்காக ஏங்கி தவித்த எங்களுக்கு இப்படி உருவமே இல்லாத பிள்ளை பிறந்ததே நாங்கள் என்ன தவறு செய்தோம். யாகம் செய்தும் பலனில்லையே என எண்ணிக் கலங்கினர். இனி துன்பப்பட்டு ப்ரயோஜனம் இல்லை குழந்தை பாசத்தில் உழன்றால் பகவத் கைங்கர்யத்திற்கு தடை ஏற்படும் என்பதற்காக தான் பரமன் இப்படி ஒரு ஜீவனை கொடுத்தார் என்று நினைத்த வண்ணம் அப்பிண்டத்தை கையிலேந்திக் கொண்டு ஊருக்கு வெளியில் உள்ள பிரம்பு புதருக்கு அருகில் சென்றனர்.  கொண்டு வந்த பிண்டத்தை பார்த்து கலங்கினர். இனி வருந்த கூடாது என்றெண்ணி கொண்டு வந்த தூய மெல்லிய ஆடையை மெத்தென்று மடித்து புதரின் கீழ் வைத்து அதன் மேல் அப்பிண்டக் குழந்தையை வைத்தார். அதை விட்டு பிரிய மனமின்றி அதையே சிறுது நேரம் பார்த்துக் கொண்டே இருந்தனர். எத்தனை நேரம் பார்த்தாலும் இந்த பிண்டம் குழந்தையாக போவதில்லை என்று நினைத்துக் கொண்டே மனைவியை அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் முனிவர்.
அப்போது திருமால் பிராட்டியாருடன் பிரம்பு புதரில் எழுந்தருளி உறுப்புகள் இல்லாத ஜீவன் திருக்கண் மலர அனுக்கிரகம் செய்தார்.  பிராட்டியாரும் அருள் பாலித்தார்.  திருமால் கடாட்சமும் திருமகள் கடாட்சமும் பெற்ற அந்த ஜீவன் தங்கம் என ஜொலித்தது. பேரொளி பொங்கும் திருவருட்செல்வமாக கை-கால்களை அசைத்து குவா-குவா என்று கேட்பவர்கள் நெஞ்சம் துடிக்கும் அளவுக்கு அழுதது. பிரம்பைக் கொண்டு பல தொழில் செய்து பிழைக்கும் திருவாளன் என்பவன் அந்த சமயம் அங்கு வந்தான்.  பிரம்பறுக்க வந்தவன் பேரொளி பொங்கும் அந்த குழந்தையை கண்டான். அது தெய்வக் குழந்தையாக தான் இருக்க முடியும் என்று நினைத்தான். தனக்கு பிள்ளையில்லா குறை தீர்க்க ஆண்டவனே அக்குழந்தையை கொடுத்திருக்கிறான் என்றெண்ணிய படி அக்குழந்தையை வெள்ளாடையோடு எடுத்துக்கொண்டதும் அக்குழந்தை அழுகையை நிறுத்தியது.
தனக்கு கிடைத்த பொக்கிஷம் என நினைத்து அக்குழந்தையை வீட்டுக்கு கொண்டு சென்று தன் மனைவி பங்கஜவல்லியிடம் கொடுத்தான். தாயன்போடு வாங்கி உச்சி மோர்ந்து முத்தமிட்டாள்.  மறுகணமே தாயன்பு மிகுதியால் அவளுக்கு மார்பில் பால் சுரந்துவிட்டது. அந்த குழந்தையை இரு கைகளிலும் ஏந்தி பாலை குடுக்க தொடங்கிய போது அக்குழந்தை பாலை குடிக்க மறுத்து விட்டது.  தாய்ப்பாலையோ தண்ணீரையோ பழத்தையோ உண்ணாமல் சொர்ணவிக்ரஹம் போல் சயனித்து இருந்தது. அக்குழந்தையின் இந்த செயல் புரியாத அவர்கள் கடவுளை பிரார்த்தித்தனர். அதிசயமான அந்த குழந்தையை பற்றி கேள்விப்பட்ட அந்த ஊர் மக்கள் அதை பார்க்க வருகை தந்தநர்.அக்குழந்தையால் திருமழிசைக்கே ஒரு பொற்காலம் வந்தது போல் நினைத்து மகிழ்ந்தனர். ஒரு நாள் அக்குழந்தையை பார்க்க ஒரு வயதானவர் தன் மனைவியோடு வந்தார். இருவருமே திருமால் அடிமைகள். பல ஆண்டுகளாகியும் குழந்தை செல்வம் இல்லாத குறையோடு இருந்தனர். இந்த அதிசய குழந்தையை பற்றி கேள்விப்பட்டு அதை பார்க்க வந்தனர். அதற்கு கொடுப்பதற்காக மதுரமான பால் கொண்டு வந்திருந்தனர். அதை பார்த்த பங்கஜவல்லி 'ஐயா! இக்குழந்தை இதுவரை எதையும் உண்டதில்லை" என்று சொன்னாள். ஆனால் அவர்களோ வெள்ளிக்கிண்ணத்தில் பாலை எடுத்து "திருமாலின் திருஅவதரமாக திருமழிசையில் அவதரித்துள்ள அருட்செல்வமே எங்கள் மனக்குறை நீங்க பாலை பருகி மகிழ வேண்டும்" என்று வேண்டிக் கொண்டு பாலை புகட்டவும் குழந்தை புன்முறுவல் பூத்த வண்ணம் பாலை பருகிவிட்டது. அதை கண்டு அனைவரும் ஆச்சர்யமுற்றனர். "என்ன தவப்பயனோ தாங்கள் கொடுத்த பாலை பருகி விட்டது இக்குழந்தை. தாங்கள் எங்கள் மீது கருணைக் கொண்டு நாள்தோறும் வந்து பால் கொடுக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்" என்றனர் திருவாளனும் பங்கஜவல்லியும். அதன்படியே தினமும் வந்து பால் புகட்டிச் சென்றனர் தம்பதியர்.
--------------
ஆதாரம் :
--------------
திருமழிசை ஆழ்வார் வைபவம் - 1
http://shrivaishnavam.blogspot.in/2012/05/blog-post_25.html

ஸ்ரீ நரசிம்மர்

★ஸ்ரீ நரசிம்மர்★

★ ஸ்ரீனிவாச கல்யாணத்திற்கான திருமண பத்திரிக்கையில் குலதெய்வம் என்ற காலத்தில் ‘ஸ்ரீ நரசிம்மரை’ போடுமாறு ஸ்ரீனிவாசர் கூறுகிறார்.

★ அன்று தயாரிக்கப்பட்ட விருந்து, ஸ்ரீ நரசிம்மருக்கு நைவேத்தியம் செய்தபிறகே அனைவரும் உண்கின்றனர். திருமணம் முடிந்த ஸ்ரீனிவாசரும், லக்‌ஷ்மி தேவியும், அஹோபிலம் சென்று ஸ்ரீ நரசிம்மரை வணங்கி வழிப்பட்டனர்.
இவ்விவரங்கள் ‘வேங்கடேச மஹாத்மியம்’ என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.

★ சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்
வ்யாப்தம்ச பூதேஷு அகிலேஷு சாத்மன:
அத்ருஷ்யதாத் அதியத்புத ரூபமுத்வஹன்
ஸ்தம்பே சபாயாம் ந ம்ருகம் ந மானுஷம்.

★ ஸ்ரீமத் பாகவத்தில் நரசிம்ம அவதாரத்தில் சொல்லப்பட்ட மிகமிக முக்கியமான ஸ்லோகம்.

★ நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று மிக நம்பிக்கையுடன் சொன்ன தன் பக்தனான பிரகலாதனின் வாக்கை காப்பாற்ற வேண்டி, மிருகமும் அல்லாத மனிதனும் அல்லாத ஒரு உருவத்தில் - நரசிம்மனாக - கம்பத்தில் இருந்து தோன்றினான்.

★ மேற்கண்ட ஸ்லோகத்திற்கு இது ஒரு எளிமையான விளக்கம். ஆனா, இந்த ஒரே ஒரு ஸ்லோகத்தை வைத்தே ஒரு நாள் முழுக்க விளக்கங்களால் பரவசப்படுத்தும் உபன்யாசகர்கள் உண்டு.

Sunday, July 8, 2018

'வெற்றி அடைவது, தோல்வி பெறுவது...!

'வெற்றி அடைவது, தோல்வி பெறுவது...!

வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. அதே நேரத்தில், நாம் யாரிடம் வெற்றி பெற வேண்டும், எவரிடம் தோல்வியைத் தழுவ வேண்டும் என்று மறைமுகமாக நமக்கு அருளியிருக்கிறார் பகவான்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்குத் தாமோதரன் எனும் திருநாமம் உண்டு. தாம்புக் கயிற்றால் ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பில் கட்டிய கதையைத்தான் நாம் அறிவோமே!

இந்த உலகையே கட்டியாள்கிற கிருஷ்ண பரமாத்மா, ஒரு சிறிய தாம்புக் கயிற்றுக்குக் கட்டுண்டு கிடந்தான்.

கயிற்றை எடுத்து அவனது இடுப்பில் சுற்றிக் கட்டலாம் என்றால், லேசாகப் பெருத்தான் கண்ணபிரான். கயிற்று முனைகளைக் கட்டுவதற்கு இரண்டு அங்குல இடைவெளி இருந்தது. இன்னொரு கயிற்றைச் சேர்த்து, முடிச்சுப் போட்டுக் கட்ட முனைந்தார்கள். இன்னும் சற்றுப் பெருத்தான். இப்போதும் இரண்டு அங்குல இடைவெளி இருந்தது.

 இன்னொரு கயிறு, இன்னொரு இரண்டு அங்குல பருமன்... என்றே இந்த விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருக்க... அவன் அம்மா சோர்ந்து போனாள். ஆனால், கண்ணன் களைப்படையவில்லை.

அந்தத் தருணத்தில்தான் பகவான் யோசித்தான். ''அடேடே..! இப்போது நாம் யாரிடம் நம் வீரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறோம்? இதோ... தோல்வியைக் கண்டு அம்மா துவண்டுவிட்டாளே! பாவம் அவள்’ என்று எண்ணியவன், 'இந்த என்னுடைய திமிர்த்தனத்தை உன்னிடம் காட்டியது தவறுதான் தாயே! இந்தாம்மா... என்னைக் கயிற்றில் கட்டிக்கொள்’என்பதுபோல், பருமனைக் குறைத்துக் கொண்டு நின்றான்.

 உடனே, குறும்புக் கண்ணனைக் கயிற்றில் கட்டிப்போட்டாள் தாய். நம்முடைய தாய் - தந்தையிடம் தோற்றுப் போவதில் தப்பே இல்லை என்பதை எவ்வளவு சூசகமாக, அழகாக, தெளிவாகச் சொல்லியிருக்கிறான் ஸ்ரீகண்ணபிரான்.

பகவான், கயிற்றுக்கெல்லாம் கட்டுப்படாதவர்.   பிறகு..?

அவர் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்படுபவர். காதலுக்கும் பிரேமைக்கும் கட்டுண்டு கிடப்பவர்.

இதனை, 'கண்ணிநுண் சிறுத்தாம்புடன் கட்டுண்டப் பண்ணிய பெரு மாயன்...’எனும் அழகிய பாடல் அற்புதமாக விளக்குகிறது.

ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பிலே அந்தக் கயிற்றுத் தழும்பைக் காணலாம். அது தழும்பு அல்ல; பட்டம்.

நெற்றியில் கிரீடம் சூட்டிக்கொண்டால், திருமண் இட்டுக் கொண்டால் அந்த இடத்தில் தழும்பேறிக் கிடக்கும், அல்லவா... அப்படித்தான் இது!

அந்தப் பட்டம் எதை உணர்த்துகிறது தெரியுமா? 'அடியவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு நான் கட்டுண்டு கிடப்பேன்’ என்பதைத்தான் அந்தத் தழும்பின் மூலம் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார், பகவான் ஸ்ரீகிருஷ்ணர்!

ஆகவே, தாய்- தந்தையிடம் தர்க்கம் வேண்டாம்; சண்டையும் பூசலும் அவசியமில்லை. வெற்றி - தோல்வி என்பதெல்லாம் முக்கியமில்லை. அவர்கள் வெற்றி பெற்றால், அதற்காக மகிழ்வது நீங்கள்தான். பூரிப்பது நீங்கள்தான்!

சரி... ஸ்ரீகிருஷ்ணர் பெற்றோரிடம் தோற்றதைப் பார்த்தோம். ஸ்ரீராமர் தோற்றது தெரியுமா? அவர் யாரிடம் தோற்றுப் போனார் என்பதை அறிவீர்களா?

கோதாவரி நதி. ஸ்ரீராமபிரானுக்கும் சீதாப்பிராட்டிக்கும் நீச்சல் போட்டி. நதிக்கு நடுவில் உள்ள பாறையை யார் முதலில் தொட்டுவிட்டுக் கரைக்கு வருகிறார் என்பது தான் போட்டி.

அந்தப் பாறையின் மேலே நடுவராக அமர்ந்திருக்கிறார் ஸ்ரீலட்சுமணர்.

ராவணன் எனும் அரக்கனையே அழித்தொழிக்க அவதரித்த ஸ்ரீராமருக்கு இதெல்லாம் ஒரு போட்டியா என்ன?

 கரையில் இருந்து சீதை பதினைந்து அடி தூரத்தைக் கடப்பதற்குள், அவர் பாறையைத் தொட்டுவிட்டுத் திரும்பி, பாதி தூரத்தைக் கடந்து வந்து கொண்டிருக்கிறார்.

இறுகிய முகத்துடன், மூச்சிழுத்துக்கொண்டு, கைகளை வீசி, கால்களை உதைத்து அரக்கப்பரக்க நீச்சலடித்துக்கொண்டு, பாறையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறாள் சீதை.

பரிதவிப்பான சீதையின் திருமுகத்தைப் பார்த்ததும், ஸ்ரீராமபிரானுக்குள் ஒரு யோசனை...

'இங்கே அரக்கனுடனா எனக்குப் போட்டி?

 யாரை வெல்ல இப்படி மல்லுக்கட்டி க்கொண்டு, வெற்றி பெறும் முனைப்புடன் வெறித்தனமாக நீச்சலடிக்கிறேன்?

 இதோ... இவள் என் பிரிய சகி அல்லவா? என் அன்புக்கு உரிய இல்லாள் அல்லவா? அவளைத் தோற்கடித்துவிட்டு, அந்த வெற்றியை எங்கே, எவரிடம் பகிர்ந்துகொண்டு கொண்டாடுவதாம்?

தீராத பகையாளியைத் தோற்கடிக்கிற புத்தியுடன் அல்லவா இந்தப் போட்டியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறேன்?’ என்று நினைத்த ஸ்ரீராமர், அப்படியே தண்ணீருக்குள் மூழ்கினார்; அங்கேயே அப்படியே அமர்ந்து கொண்டார்.

அதையடுத்து, சீதாதேவி வேகமாக நீந்திக் கரையை அடைந்தாள்; வெற்றியும் பெற்றாள். அதுவரை நடுவராக இருந்த ஸ்ரீலட்சுமணர், தடாலென்று கட்சி மாறி, அண்ணியாருடன் இணைந்து, 'என்ன அண்ணா! அடடா! இப்படி அநியாயமா தோத்துப் போயிட்டீங்களே’என்று ஸ்ரீராமரைக் கேலி செய்தார். சீதையும் ஸ்ரீராமரை வெகுவாகக் கேலி செய்தாள்.

அசோகவனத்தில் சிறை இருந்தபோது, ஸ்ரீராமரை நினைத்தபடியே கிடந்தபோது, அங்கே ஸ்ரீஅனுமன் வர... அவனிடம் இந்தச் சம்பவங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி, 'ஹூம்... அவரும் நானும் எப்படியெல்லாம் சந்தோஷமும் குதூகலமுமாக வாழ்ந்தோம், தெரியுமா?’என்றபடி ஏக்கப் பெருமூச்சு விட்டாளாம்!

இதைத்தான், 'பத்தினிக்குத் தோற்பான் பரம ரசிகன்’என்று சொல்லி வைத்தனர் நம் முன்னோர்.

 'மனைவியைத் தோற்கடித்துவிட்டு வெற்றி பெற்ற பூரிப்பை எவரிடம் சொல்லிப் பெருமைப்பட முடியும்?

அவளிடம் தோற்றுப் போனால், அந்தத் தோல்வியைக்கூட அவளிடம் பெருமைபடப் பேசி மகிழலாம்!

இன்னும் சொல்லப் போனால், மனைவியிடம் தோற்றுப் போனால், வாழ்வில் ஜெயிக்கலாம்!

ஆக, பெற்றோர்களுக்குக் கட்டுப்படுவதை ஸ்ரீகண்ணனும், மனைவிக்கு விட்டுக்கொடுப்பதை ஸ்ரீராமபிரானும் நமக்கு மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள். உணர்ந்து, தெளிந்து, செயல்படுபவர்கள் பாக்கியவான்கள்!

இந்த அருங்குணங்களால் திளைத்த ஸ்ரீஆண்டாள், 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’என்று உருகிப் பாடுகிறாள்.

 சீதாபிராட்டியிடம் 'மாயாசிரஸ்’ கொண்டு வந்து காட்டுகிறான் ராவணன்.

'இதோ, உன் கணவனின் தலை. அவன் இறந்துவிட்டான்’ என்று மாயத் தோற்றத்தை, கொய்த தலையைக் கையில் வைத்துக் காட்டுகிறான்.

 'ஸ்ரீராமர் உயிருடன் இருக்கிறார்’எனும் தகவல் ஏற்கெனவே தெரிந்துவிட்டது சீதாவுக்கு!

 எனவே, அவள் கலகலவெனச் சிரித்துக்கொண்டே, 'அவர் சாகவில்லை’ என்றாள்.

'எப்படிச் சொல்கிறாய்?’என்று ராவணன் கேட்டான்.

அதற்கு அவள், ''எப்போது நான் உயிருடன் இருக்கிறேனோ, அப்போது அவரும் உயிருடன் இருக்கிறார் என்றுதான் அர்த்தம். இப்போது, அவர் உயிருடன் இருக்கிறார். ஒருவேளை நீ சொல்வது போல், அவர் உயிருடன் இல்லையெனில், இந்நேரம் நானும் உயிருடன் இருந்திருக்க மாட்டேன்!'' என்றாள்.

'நீயின்றி நானில்லை; 'நானின்றி அவனில்லை!’ என்பார்கள். பரஸ்பரம் இந்த முக்கியத்துவத்தையும் பேரன்பையும் உணர்ந்துவிட்டால், அந்தத் தம்பதியை எவராலும் எப்போதும் எதுவும் செய்துவிட முடியாது!

நம்மிடம் உள்ள குணங்களில் ஏதேனும் ஒன்று நம்மைப் போலவே வேறொருவருக்கும் இருந்தால், சட்டென்று அவர்கள் மீது சிநேகிதம், பிரியம், வாஞ்சை... நமக்கு வரும் அல்லவா?!

 பகவானும் அப்படித்தான்...
 அவனுடைய குணங்கள் நம்முடைய குணங்களாக இருந்துவிட்டால், இறைவன் நமக்கு சிநேகிதனாக, பிரியம் உள்ளவனாக, வாஞ்சை உள்ளவனாக இருப்பான்!

ஹரே கிருஷ்ணா

நீங்கள் எதை நினைகின்றீர்களோ அதுவாகவே ஆகிவிடுவீர்கள்

நீங்கள் எதை நினைகின்றீர்களோ
அதுவாகவே ஆகிவிடுவீர்கள்
இறைவனின் நாமமும்
இறைவனின் வடிவமும்,
இறைவனும் அனைத்தும் ஒன்றே.



ஒரு சாதாரண வெள்ளை காகிதம்
அல்லது வர்ண காகித துண்டிற்கு
மதிப்பு கிடையாது ஆனால் அந்த
காகிதத்தின் மீது அரசாங்கத்தின்  முத்திரை
இருந்துவிட்டால் நீங்கள் அதை பத்திரமாக உங்களுடைய
பணபைய்யிலோ அல்லது இரும்பு பெட்டியிலேயோ
வைத்து கொள்ளுகிறீர்கள்
இதேபோல்தான் ஒரு கல்; துண்டுக்கும்
எந்தவித மதிப்பும் கிடையாது
நீங்கள் அதை எறிந்துவிடுகிறீர்கள்

ஆனால் நீங்கள் பண்டரிபுரதிலுள்ள
கிருஷ்ணா பரமாத்மாவின் கல் சிலையையோ
அல்லது கோயில்களிலுள்ள மூர்த்தியை
 பார்த்தால் கை கூப்பி வணங்குகிறீர்கள்
ஏனென்றால் அந்த கல்லின் மீது இறைவனின்
முத்திரை இருக்கிறது
பக்தன் அந்த கல் சிலை மீது தன்னுடைய அன்பிர்க்குரியவனையும்,அவனுடைய
எல்லா குணாதிசயங்களையும் காண்கின்றான்.

ஒருவன் ஆன்மீகத்தில் தொடர்ந்து இடைவிடாமல்
பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்
தொடர்ந்து பயிற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் தேவைப்படுவதெல்லாம் இறைவனிடம்
 மாறாத அன்பு ஒன்றுதான்
இது இடையறாது இருக்கவேண்டும்

பாகவதம்-ஒரு புதிய சிந்தனை

பாகவதம்-ஒரு புதிய சிந்தனை
பாகவதம்


பாகவதம் என்ற நூல் பகவான் கிருஷ்ணனின்
லீலைகளையும் , போதனைகளையும் விவரிக்கும்
பக்தி இலக்கியம்
உலக மாயையிலே உழலும் மாந்தர்கள்
இதை படித்து அல்லது கேடடு இன்புற்று
மன அமைதியும் இறை கருணையும்
பெற்று வருகின்றனர்
பாகவதம் என்ற நூல் கிருஷ்ணனை பற்றி
விவரிப்பதால் கிருஷ்ண காவியம் அல்லது
கிருஷ்ண லீலை அல்லது கிருஷ்ணன் கதை
என்றுதான் பெயரிடபட்டிருக்கவேண்டும்
ஆனால் ஏன் பாகவதம் என்று பெயரிடபட்டிருக்கிறது?
இறைவனை நாம் அடைய முடியாமல் நமக்கு
தடையாய் இருப்பது இந்த உலக மனிதர்களிடமும் மற்ற
பொருட்களிடமும் நாம் வைத்திருக்கும் பாசமும் பற்றும்தான்
மற்றொன்று நம்மிடமுள்ள கர்வமும் தான் என்ற அகந்தையும்தான்
பா என்றால் பாசம்
க என்றால் கர்வம்
வதம் என்றால் அழிப்பது

இந்த பாகவத கதையை நாம் உரிய முறையில்
புரிந்து கொண்டால் பாச வலையில் சிக்கி வாழ்நாள் முழுவதும்
துன்பப்படும் நாம் அதிலிருந்து விடுபட்டு இறைஅருளை பெறுவது திண்ணம்

அதைபோல் நம்மை கருவியாக கொண்டு
அனைத்தையும் இறைவன் செய்துகொண்டிருக்க
நாம்தான் அனைத்தையும் செய்கின்றோம் என்று அகந்தை கொண்டு
நாமும் துன்பதிற்க்குள்ளாகி பிறரையும் துன்பத்திற்குள்ளாக்கும்
கர்வத்தை அழிப்பதற்கு உதவுவது பாகவத புராணம்

நாம் பரிபூரண சரணாகதி செய்து
இறைவன் அருளை  அடைய வழி காட்டுவதும் பாகவத புராணம்தான்
.
எனவே இந்த எண்ணத்துடன் நாம் பாகவதத்தை நாம் அணுகினால்
நம் பிறவி தொலையும் .நாம் புனிதர்களாகி இறைவனுடன் இரண்டற கலந்து
நீங்கா இன்பம் அடைவது மிக எளிது

Friday, July 6, 2018

ஸ்ரீநம்மாழ்வார் பாராங்குச நாயகியாக.....!!!

ஸ்ரீநம்மாழ்வார் பாராங்குச நாயகியாக.....!!!

கங்குலும் பகலும் கண்த
துயிலறியாள்* கண்ண நீர் கைகளால் இறைக்கும்*
சங்கு சக்கரங்களென்று
கை கூப்பும்* தாமரைக் கண் என்று தளரும்*
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்* இருநிலம் கைதுழாவிருக்கும்*
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய்!* இவள்திறத்து
என்செய்கின்றாயே?

ஸ்ரீநம்மாழ்வார் 💠 திருவாய்மொழி 7.2.1

அழகிய மீன்கள் துள்ளி திருக்காவேரி சயனித்த தருள்பவனே!
(இம்பெண்பிள்ளை யானவள்)
இரவும் பகலும் கண்ணுறங்கப் பெறுகின்றிலள்!
கண்ணீரைக் கைகளாலே இறைக்க வேண்டும்படி தாரை தாரையாய்ப் பெருகவிடாநின்றாள்!
திருவாழி திருச்சங்குகள் இதோ ஸேவை ஸாதிக்கின்றன!
என்று சொல்லி அஞ்ஜலி பண்ணி நின்றாள்!
(என்னைக் காடக்ஷித்த) தாமரைக் கண்களன்றோ இவை! என்று சொல்லித் தளர்கன்றாள்;
(பிரானே) உன்னைவிட்டுப் பிரிந்து தரிக்கவும் முடியுமோ? என்கின்றாள்;
விஸ்தீர்ணமான பூதலத்தை
கைகளாலே துழாவாநின்றாள் (ஸ்ரீ ரங்காநாதனே!)
இப் பெண்பிள்ளை விஷயத்தில் ஏது செய்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறாய்?

(கங்குலும் பகலும்) பேச்சுக்கு நிலமல்லாதபடி தன் மகளுக்குண்டாயிருக்கிற நிலைமையைப் பெரியபெருமானுக்கு அறிவித்து இவள் விஷயமாக நீர் செய்தருள் நினைக்கிறது என்னோ? என்று கேட்கிறாள் ஸ்ரீபராங்குச நாயகியின் திருத்தாய்.

கங்குலும் பகலும் கண்துயிலறியாள்- கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே என்று (திருவித்தத்தில்) அருளிச் இவ்வாழ்வாரேயாதலால் இரவோடு பகலோடு வாசியறக் கண்துயிலாதே இவர்க்கு. ஸம்ஸாரிகள் உறக்கமே யாத்திரையாயிருப்பர்கள். ஆழ்வார் இந்நிலத்திலிருந்துவைத்தே இமையோர் படியாயிருப்பர். விசாரமுள்ளவர்கட்குக் கண்ணுறங்குமோ? என்றுகொல் சேர்வாந்தோ என்றும் எந்நாள்யானுங்னையினிந்து கூடுவனே என்றும் இடையறாத விசாரங்கொண்ட விவர்க்குக் கண்ணாறங்க விரகில்லையன்றோ.

“கண்துயில் அறியாள்’ என்றதன் கருத்தை நம்பிள்ளை காட்டியருளுகின்றார் -“ஸம்ச்லேஷத்தில் அவன் உறங்கவொட்டான்; விச்லேஷத்தில் விரஹவ்யஸநம் உறங்கவொட்டாது; ஆகையாலே இவளுக்கு இரண்டு படியாலும் உறக்கமில்லாமையாலே அறியாளென்கிறது.”

கண்ணநீர் கைகளாலிறைக்கும்-தூராதமனக்காதல் தொண்டர் தங்கள் குழாங் குழுமித் திருப்புதழ்கள் பலவும்பாடி ஆராத மனக்களிப்போடழுத கண்ணீர் மழைசோர என்றும், ஏறாடர்த்ததும் ஏனமாய் நிலங்கீண்டதும் முன்னிராமானய் மாறடாத்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடி வண்பொன்னிப் பேராறு போல்வருங் கண்ணநீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றஞ் சேறு செய் தொண்டர் என்றும் சொல்லுகிறபடியே எம்பெருமானுடைய ஒவ்வொரு குணசேஷ்டிதங்களை நினைத்துத் தாரை தாரையாய்க் கண்ணீர் பெருகவிடுவது பக்தாகளுக்கு ஒரு நித்யக்ருத்யமாதலால் அதனைச் சொல்லுகிறது. கைளாவிறைக்கு மென்றது கண்ணீரின் மிகுதி சொன்னபடி.

சங்கு சக்கரங்கனென்று சைகூப்பும் - கண்ணீர்;  பெருகாநிற்கச்செய்தே சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களுமாய் நம்பெருமாள் ஸேவை ஸாதிக்கிற அழகு காண்மின் காண்மின! காண வாரீர்! என்று சொல்லி பாவநாப்ரகர்ஷத்தாலே சங்கு சக்சரங்களை நோக்கிக் கை கூப்புகின்றாள். இன்னாரென்றறியேன் என்று பரகாலநாயகி அஸாதாரண லக்ஷ்ணங்களைக் காணநிற்கச் செய்தேயும் இன்னாரென்று அறுதியிடமாட்டாதே பேசுகிறாள்; இப்பராங்குச நாயகி திருவாழி திருச்சங்குகளைச் காணாதவளவிலும் கண்டதாக நினைத்து வாயால்மொழிந்து அஞ்ஜலி பந்தம் பண்ணாநின்றாள்.

தாமரைக்கண்ணென்றே தளரும்- “தாமரைக் கண்களால் நோக்காய்” என்று சொல்ல வேணுமென நினைத்துத் தொடங்கினாள்; தாமரைக்கண் என்ற வளவிலே விகாரப்பட்டு மேலே சொல் எழமாட்டாமல் தளர்கின்றாள். (திருவிருத்தத்தில்) பெருங்கேழலார் தம்பெருங்கண் மலர்ப்புண்டரீகம் நம்மேல் ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் என்று அத்தலையில் திருக்கிண்ணோந்தமடியாகவே தாம் ஒரு பொருளாகப் பெற்றதாக அருளிச் செய்தாராகையாலே அந்தத் திருக்கண்களை நினைத்து என்னை இவ்வளவனாக ஆக்கின திருக்கண்களுக்கு இப்போது உபேக்ஷிக்கை பணியாயிற்றோ!” என்கிறளாகவுமாம்.
உன்னைவிட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும்- உண்டியே உடையே உகந்தோடுமிம் மண்டலத்தவரிலே என்னையும் ஒருத்தியாக (-ஸம்ஸாரியாக) வைத்திருந்தால் நான் சூது சதுரங்கமாடியும் விஷயாந்தரங்களிலே மண்டியம் உறங்கியும் ஓடிய முழன்றும் ஒருவாறு போதுபோக்கித் தரித்திருக்கமாட்டேனோ? வேறொன்றால் தரிக்கவொண்ணாதபடி என்னை இப்படியாக்கி இப்போது கைவாங்கிநிற்கிறயே! பிரானே! இது  தகுதியோ வென்கிறாள்.

கார்கலந்தமேனியான் கைகலந்தவாழியான் பார்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான் சீர்கலந்த சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையினாழ்; துயரை என்னினைந்து போக்குவரிப்போது என்று அடியிலே பேசினளரன்றோ இவர். கார்கலந்த சொல்லும், பார்த்தை வல்வயிற்றான் சீர்கலந்த சொல்லும, பாம்பணையான் சீலீகலந்த சொல்லும், பார்த்தை போதுபோக்கலாமேயன்றி வெறொன்றால் போதுபோக்கலாஜீது என்று அறுதியிட்டார். எப்போதும் சீர்கலந்த சொல்நினைத்த போதுபோக்க வொண்ணுமோ? இடையிடையே காட்சியும் வேண்டாவோ? காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் என்று பேசுவதற்கும் இலக்குக் கிடைத்தாலன்றோ தரிக்கலாவது என்றிருக்கிறாள் போலும்.

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...